வயதான பெற்றோரை உதாசீனப்படுத்த கூடாது - இயக்குனர் கணேஷ்பாபு

‘ஆநிரை’ என்ற 33 நிமிடங்கள் கொண்ட குறும்படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
கோவாவில் நடந்து முடிந்த 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்', அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்', இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்த ‘ஆநிரை’ ஆகிய 3 படங்கள் திரையிடப்பட்டன.
இதில் ‘ஆநிரை’ என்ற 33 நிமிடங்கள் கொண்ட குறும்படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி, மீரா, கவுரிசங்கர், காமாட்சிசுந்தரம், கணேஷ்பாபு நடித்த இந்த குறும்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து கணேஷ்பாபு கூறுகையில், “கறவை நின்ற ஒரு பசு மாட்டை காப்பாற்ற துடிக்கும் ஒரு எளிய மனிதனின் கதைதான் இந்த படம். படத்தில் வரும் பசுமாடு போலவே, வயதான பெற்றோரையும் பலர் உதாசீனப்படுத்தி வருகிறார்கள். நம்மை பராமரித்து வளர்த்த அந்த தெய்வங்களை வயதான காலத்தில் பராமரிப்பது நமது கடமை. கோவாவில் ‘ஆநிரை’ படத்தைப் பார்த்து ‘இனி தோல் கருவிகளை வாசிக்க என் மனம் எப்படி பதறுமோ...' என்று ‘ஆஸ்கார்' விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ந்து கூறியதை மறக்கமுடியாது. இப்படம் விரைவில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது'” என்றார்.






