பிரபல இயக்குனர் வி. சேகர் மரணம்; திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

இயக்குனர் வி.சேகர் (வயது 72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை,
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குனர் என பெயரெடுத்தவர், வி.சேகர். ‘விரலுக்கேத்த வீக்கம்', ‘வரவு எட்டணா செலவு பத்தணா', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', ‘காலம் மாறிப் போச்சு' போன்ற இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பெரியளவில் ‘ஹிட்' ஆனது. சென்னை கோடம்பாக்கத்தில் வி.சேகர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் அவருக்கு இதய சிகிச்சை நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு ரத்த சேவை செல்லாமல் இருந்ததால் விழிமூடிய நிலையிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72. வி.சேகர் உடல் இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த வி.சேகர் பாக்யராஜ் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ‘நீங்களும் ஹீரோதான்' என்ற படத்தை முதன்முதலில் இயக்கினார். அதன்பிறகு பல படங்கள் இயக்கியுள்ளார். தனது திருவள்ளுவர் கலைக்கூடம் நிறுவனம் மூலம் சில படங்களையும் தயாரித்துள்ளார். ஓரிரு படங்களில் நடித்துள்ளார். டி.வி. தொடர்களையும் இயக்கியுள்ளார்.
வி.சேகரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.






