மதராஸி படத்துடன் மோதும் காந்தி கண்ணாடி: துணிச்சலான முடிவா? - பாலா பதில்

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாமென நடிகர் பாலா கூறினார்.
சென்னை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார் பாலா. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த பாலா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ‘காந்தி கண்ணாடி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.
இந்த படம் வருகிற 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காந்தி கண்ணாடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாலா பதிலளித்து பேசியதாவது;
"நான் பல படங்களில் காமெடியனாக நடித்தேன். அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறவில்லை. 'காந்தி கண்ணாடி'-யில் இப்போ ஹீரோ ஆகிவிட்டேன். ஆனாலும் 50 ஹீரோயின்கள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி மோதுவது துணிச்சலான முடிவா? என்று கேட்கிறீர்கள்.. மதராசி படம் வெற்றி பெறும்., அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள். எங்க படமும் வெற்றி அடையும்.
நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம், அவர் இருக்கும் உயரம் வேறு, நான் இருக்கும் இடம் வேறு. நான் எந்த அரசியல் தலைவர்களுக்கும் எதிராக செயல்படவில்லை, வறுமைக்கு எதிராக செயல்படுகிறேன்"
இவ்வாறு அவர் பேசினார்.






