மார்பிங் படங்களால் “ஜவான்” பட நடிகை வேதனை

ஏஐ உதவியால் நடிகைகளை மோசமாக சித்தரிக்காதீர்கள் என்று “ஜவான்” பட நடிகை கிரிஜா ஓக் கூறியுள்ளார்.
37 வயதான மராத்திய நடிகை கிரிஜா ஓக் நேர்காணல் ஒன்றில் மூலமாக திடீரென வைரலானார். அந்த நேர்காணலில் அவர் கட்டியிருந்த ஸ்லீவ்லெஸ் புடவையும் கவனம் ஈர்த்தன. ஒரே வாரத்தில் ‘புதிய நேஷனல் க்ரஸ்’ என ‘ஜென் இசட்’ இளைஞர்களால் கொண்டாடப்பட்டார்.
அட்லி இயக்கிய ஜவான் படத்திலும் நடித்துள்ள இவர் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களினால் கிடைக்காத வளர்ச்சி ஒரே நேர்காணலினால் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவரது புகைப்படங்களை சிலர் ஆபசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கிரிஜா ஓக் “நான் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறேன். சமூக வலைதளங்கள் எப்படி இயங்குமென எனக்குத் தெரியும். யாராவது எதாவது டிரெண்டானால் இதுமாதிரியான புகைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. மக்கள் அதைக் கிளிக் செய்யும்வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கும். என்னைப் பாதிப்பது என்னவென்றால், அதற்கு எல்லை இல்லை..எனக்கு 12 வயதில் மகன் இருக்கிறான். அவன் தற்போது சமூக வலைதளத்தில் இல்லை. வருங்காலத்தில் பயன்படுத்துவான். இப்போது சுற்றுகிற புகைப்படங்கள் அப்போதும் இருக்கும்.
ஒரு அம்மாவின் புகைப்படங்களை அவனும் ஒருநாள் பார்ப்பான். அது போலியானதென அவனுக்குத் தெரியும். இதுமாதிரியான கேவலமான செயல்களை விருப்பத்திற்காக செய்வது பயமுறுத்தும்படியாக இருக்கிறது. இதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் எதுவும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ஏஐ உதவியால் இப்படி செய்பவர்கள் ஒருமுறைக்கு இரண்டுமுறை சிந்தியுங்கள். உங்கள் வேடிக்கையான செயலுக்காக நாங்கல் பாதிக்கப்படுகிறோம். திடீர் புகழ் நல்லதுதான். ஆனால், மோசமாக சித்தரிக்காதீர்கள் என்பது மட்டுமே என்னுடைய கோரிக்கை” என்றார்.






