‘நான் ராணுவ வீரரின் மகள்’ நடிகை செலினா ஜெட்லி உணர்வுபூர்வ பதிவு

வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது என நடிகை செலினா ஜெட்லி உணர்வுப்பூர்வ பதிவிட்டுள்ளார்.
இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் செலினா ஜெட்லி. ஆஸ்திரேலிய தொழில் அதிபர் பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்ட செலினா ஜெட்லிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. செலினா ஜெட்லி கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், நஷ்ட ஈடாக ரூ.50 கோடி தர வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான பதிவில் கூறி இருப்பதாவது:- வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது. நான் நம்பியவர்கள் விலகிச் சென்றனர். நம்பிய வாக்குறுதிகள் மவுனமாக உடைந்தன. ஆனால் புயல் என்னை மூழ்கடிக்கவில்லை. என்னை விடுவித்தது.
எனக்குள் இறக்க மறுக்கும் பெண்ணை சந்திக்க என்னை கட்டாயப்படுத்தியது. ஏனென்றால் நான் ஒரு ராணுவ வீரரின் மகள். தைரியம், ஒழுக்கம், மன உறுதி, மீள்தன்மை நெருப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் வளர்க்கப்பட்டேன். ஒரு ராணுவ வீரரின் மகளாக வளர்க்கப்பட்டது துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு வடிவமைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






