“நான் கேப்டன் பையன், நிச்சயம் ஜெயிப்பேன்” என சொல்லிக்கொண்டிருப்பார் என் தம்பி - விஜய பிரபாகரன்

சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்த ‘கொம்புசீவி’ படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மதுர வீரன், படை தலைவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடித்துள்ளனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

‘கொம்பு சீவி’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய பிராபகரன், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோவின் அண்ணனாக இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு நான் வரவில்லை. சண்முகப்பாண்டியன் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். 2012-ல் இருந்து சம்மு நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமாவில் கிட்டதட்ட 13 வருட பயணம். இந்த 13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் சம்முவுக்கு இது 4-வது படம் தான். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாதப்போது படங்களில் நடிக்காமல் உடன் இருந்து பார்த்துகொண்டார்.
அந்த சமயத்தில் தான் அப்பா என்னை அரசியலுக்கு அனுப்பி வைத்தார். சில படங்கள் சம்முவுக்கு கைக்கூடவில்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சம்மு தைரியமாக நின்றார். 'நான் கேப்டன் பையன் நிச்சயம் ஜெயிப்பேன்' என சொல்லிக்கொண்டே இருப்பார். என்னால் முடியும் என்று இந்த 13 வருஷமும் அவருடைய பேஷனை மட்டும் அவர் விடவே இல்லை” என்று பேசியிருக்கிறார்.






