"சென்னைக்கு வந்தும் கஷ்டப்படுவது என்பது தண்டனை என்பேன்"- சந்தோஷ் நாராயணன்

‘மிடில் கிளாஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.
சென்னை,
தேவ், கே.வி.துரை தயாரித்து கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘‘நான் ‘மிடில் கிளாஸ்'-ஐ விட தரைமட்டமாக இருந்தவன். ஒருமுறை பெங்களூருவுக்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியிருந்தது. ரூ.5 ஆயிரம் தருவதாக சொன்னதால், கையில் இருந்த சில்லரைகளை மட்டும் பொறுக்கிக்கொண்டு பெங்களூரு சென்றேன்.
விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு குலுக்கலில் டி.வி.யை பரிசாகப் பெற்றேன். அதற்கு வரி ரூ.300 கட்ட சொன்னார்கள். என்னிடம் ரூ.150 தான் இருந்தது. அதை அதிகாரிகளிடம் கொடுத்து, மீதத்தை அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கடைசி வரை அந்த டி.வி. வரவில்லை.
சென்னைக்கு வந்தும் கஷ்டப்படுவது என்பது, நமக்கு நாமே வேண்டுமென்றே கொடுக்கும் தண்டனை என்பேன். முயற்சி எனும் தூண்டிலை வீசிக்கொண்டே இருக்கவேண்டும். நிச்சயம், என்றாவது பலன் கிடைக்கும். சென்னை ஒரு வங்கி மாதிரி. கொஞ்சம் கொஞ்சமாக லோன் வாங்கிக்கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்'', என்றார்.






