

சென்னை,
சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோட்'. இப்படத்தின் மூலம், 'பேச்சிலர்' பட கதாநாயகி திவ்ய பாரதி, தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன, மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன.
நரேஷ் குப்பிலி இந்தப் படத்தின் இயக்குநராக இருந்தார். ஆனால், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையிலான பட்ஜெட் வேறுபாடுகள் காரணமாக, படம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இயக்குனரும் விலகினார்.
சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில், இயக்குனர் நரேஷ் , திவ்ய பாரதி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திவ்ய பாரதியும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த நிகழ்வில் திவ்ய பாரதி பேசுகையில், எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதனால்தான் இயக்குனருடன் பிரச்சினையைப் பற்றி டுவீட் செய்தேன். தனிப்பட்ட முறையில், இயக்குனருடனும் ஹீரோவுடனும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இது ஒரு நகைச்சுவை படம் என்பதால், நான் அதற்கு ஓகே சொன்னேன்.அந்த நேரத்தில், இயக்குனரையும் சுதீரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.