இயக்குனர் மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்- துருவ் விக்ரம்


இயக்குனர் மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்- துருவ் விக்ரம்
x
தினத்தந்தி 13 Oct 2025 3:58 PM IST (Updated: 13 Oct 2025 5:29 PM IST)
t-max-icont-min-icon

பைசனில் நான் நடித்ததைவிட மாரி செல்வராஜ் நடித்திருந்தால் படம் இன்னும் மிகப்பெரிய இடத்தை அடைத்திருக்கும் என்று துருவ் விக்ரம் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், இயக்குநர்கள் பா. இரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர், நடிகர்கள் துருவ், பசுபதி, லால், அனுபமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் துருவ், “பைசன் திரைப்படத்திற்காக எவ்வளவோ பேர் எனக்கு உதவியிருக்கிறார்கள். முக்கியமாக, கபடி ஆசிரியர் மணத்தி கணேசன், என் உடற்பயிற்சியாளர்கள், என்னுடன் கபடி விளையாடிய சகோதரர்கள் என இவர்களுடன் பயணித்தது மறக்க முடியாதது. நான் சரியாக படிக்காதது என் அம்மாவிற்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால், பைசனைப் பார்த்து பெருமையடைவார். பைசன் படப்பிடிப்பின் கஷ்டமான காட்சிகளில் சீயானை நினைத்துக்கொள்வேன். அவர் கொடுத்த உழைப்பை என்னால் வழங்க முடியும் என ஒவ்வொரு நாளும் வேலை செய்தேன்.

இயக்குநர் மாரி செல்வராஜுக்காக 2, 3 ஆண்டுகள் அல்ல 10, 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன். அவரிடம் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். பைசனில் நான் நடித்ததைவிட மாரி செல்வராஜ் நடித்திருந்தால் இன்னும் மிகப்பெரிய இடத்தை அடைத்திருக்கும். எனக்காக இல்லாமல் அவரின் உழைப்புக்காக, சினிமா மீதான அக்கறைக்காக இப்படம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்

1 More update

Next Story