சினிமாவில் வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? திருமாவளவன் கேள்வி

வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா என்று ‘நெல்லை பாய்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசியுள்ளார்.
கதையின் நாயகனாக அறிவழகன், நாயகியாக ஹேமா ராஜ்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல் ஜி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ‘அருவா சண்ட’ படத்தை வி.ராஜா தயாரித்துள்ளார். ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தொல் திருமாவளவன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் தொல்.திருமாவளவன் “சிறு முதலீட்டுப் படங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. 'நெல்லை பாய்ஸ்' திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் படத்தலைப்பின் எழுத்தைப் பார்த்ததும் நான் கேட்டேன், என்ன இந்த நெல்லையில் நிறைய அரிவாள்கள் இருக்கின்றன, கொடுவாள்கள் இருக்கின்றன. இந்த எழுத்தின் வடிவமைப்பிலேயே அரிவாள் இருக்கிறதே என்று கேட்டேன். நெல்லை என்றாலே அரிவாள் என்று சித்தரிக்கவேண்டும் என்று இல்லை. திரைப்படங்களில் எனக்கு நெடுநாளாக உள்ள ஒரு பெரிய கேள்வி. வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? என்ற கேள்வி. வன்முறைகளுக்கு முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் தராமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா என்ற கேள்வி.
தென்மாவட்டம் என்றாலே அரிவாள் கலாசாரம், நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிற போக்கு தொடர்ந்து இருக்கிறதே என்ற கவலை எனக்கு உண்டு. திரைப்படங்களில் காட்டுகிற வன்முறை காட்சிகளைத்தான் தினந்தோறும் பார்க்கிறோம். அதன் மூலம் ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது. சாதி அமைப்பை நியாயப்படுத்துவது , சாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பது மதவாத அரசியலை நியாயப்படுத்துவது இவை எல்லாம் சமூகத்தின் நலன்களுக்கு உகந்தவையா என்ற சிந்தனை தேவை. பெரியார் அதற்காகத் தன் வாழ்க்கையை முழுமையாக ஒப்டைத்துக்கொண்டார். அவர்களெல்லாம் இந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்பினார்களோ அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் பெரிதாக திரைப்படத்தில் பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு எதிரான காட்சிகளை அமைத்து ஓர் எதிரான போக்கைச் சமூகத்தில் வளர்த்து விடாமல் இருந்தாலே போதும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள். இவர்கள் இளம் இயக்குநர், இளம் தயாரிப்பாளர் .இவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.






