''தினமும் அதை சொல்வேன்''... - டிரோல்களுக்கு பதிலளித்த ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் தற்போது ''பரம் சுந்தரி'' படத்தின் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னை,
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தற்போது காதல் - நகைச்சுவை படமான பரம் சுந்தரியில் நடித்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை துஷார் ஜலோட்டா இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தற்போது இப்படத்தின் புரமோஷனில் ஜான்வி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் ஜான்வி கபூர் பங்கேற்றார். அவ்விழாவில் தயிர் பானையை உடைத்து அவர் மகிழ்ந்தார். அப்போது அவர் "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலானநிலையில், இது சுதந்திர தினம் அல்ல என்று ஜான்வி டிரோல் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த டிரோல்களுக்கு ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவில், அங்குள்ள அனைவரும் தனக்கு முன் பாரத் மாதா கி ஜெய் என்று கூறியதாகவும், அதன் பின்னர்தான் தான் அதை சொன்னதாகவும் கூறினார். வேண்டுமென்றே வீடியோவை கட் செய்து இவ்வாறு வைரலாக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டுமல்ல, தினமும் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்வேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.






