'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' ரிலீஸ் தள்ளி வைப்பு - சூர்யா அறிவிப்பு


வேட்டையன் படத்திற்காக கங்குவா ரிலீஸ் தள்ளி வைப்பு - சூர்யா அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2024 12:28 AM IST (Updated: 1 Sept 2024 12:28 AM IST)
t-max-icont-min-icon

'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

கோவை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படமும் வருகிற அக்டோபர் 10-ந்தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற 'மெய்யழகன்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா இதை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, "ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம்.

'கங்குவா' ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.


Next Story