பாடகர் வேடனுக்கு முன்ஜாமின் - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

அக்டோபர் 9-ந்தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக ராப் பாடகர் வேடனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
சமூக வலைதளங்களில் ராப் இசைப் பாடல்களை பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் பாடகர் வேடன். இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், ராப் இசை பாடகர் வேடன் மீது கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். பாடகர் வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கேட்டு பாடகர் வேடன் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பாலியல் வழக்கில் ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 9-ந்தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக ராப் பாடகர் வேடனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






