‘மதத்தின் பெயரால் பிறரை கொல்வது, காயப்படுத்துவது தவறானது’ - ஏ.ஆர்.ரகுமான்


‘மதத்தின் பெயரால் பிறரை கொல்வது, காயப்படுத்துவது தவறானது’ - ஏ.ஆர்.ரகுமான்
x

மக்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் நம்பிக்கை தூய்மையானதாக இருக்க வேண்டும் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் 'இசைப்புயல்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

7 தேசிய விருதுகளை வென்றுள்ள இவர் ஸ்லம்டக் மில்லியினர் படத்திற்கு இசை அமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றார். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான், தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப்குமார் ஆகும். அவரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரகுமான் என்று மாற்றிக்கொண்டார். மேலும், சூபி தத்துவம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரான அவர், ‘ராக்ஸ்டார்’. ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சூபி இசையை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானிடம் மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“நான் அனைத்து மதங்களின் ரசிகன். இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து நிறைய ஆராய்ந்துள்ளேன். மதத்தின் பெயரால் மற்றவர்களை கொல்வது, காயப்படுத்துவது தவறானது. நான் மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன். இசை நிகழ்ச்சி நடத்தும்போது, அந்த இடத்தை புனித தலம் போல் உணர்கிறேன்.

மக்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும் நம்பிக்கை தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆன்மிக ரீதியில் செல்வ செழிப்புடன் இருக்கும்வரை இலக்குகளை நம்மால் அடைய முடியும். சூபி தத்துவம் என்பது நாம் இறப்பதற்கு முன்பே இறப்பது போன்றது. அதில் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்வதற்கான திரைகள் உள்ளன.

அந்த திரைகளை அகற்ற நீங்கள் அழிய வேண்டும். காமம், பேராசை, பொறாமை, தீர்ப்பளிக்கும் மனப்பான்மை ஆகிய அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் அகங்காரம் போய்விடும். பின்னர் நீங்கள் கடவுளைப் போல் வெளிப்படையானவர் ஆகிவிடுவீர்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story