பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்


பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
x
தினத்தந்தி 14 Jun 2025 10:29 AM IST (Updated: 14 Jun 2025 11:55 AM IST)
t-max-icont-min-icon

'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி.

சிவகங்கை,

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை கொல்லங்குடி உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.வயல் வெளியில் ஒலித்த கிராமிய பாட்டு அகில இந்திய வானொலி வாயிலாக ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஒலித்தது.

ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயிசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் ஒடுங்கிப்போனார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 99. மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story