ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக புதிய வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்


ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக புதிய வழக்கு தொடர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்
x
தினத்தந்தி 10 Nov 2025 7:12 PM IST (Updated: 10 Nov 2025 7:21 PM IST)
t-max-icont-min-icon

தன்னை பற்றி அவதூறான வீடியோ வெளியிட தடை விதிக்க கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜிக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததாகவும், என்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கூறியதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாய் கிரிசில்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். ரங்ஜராஜுக்கு எதிரான புகார் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், எந்த விசாரணை நடத்தாமல், அவரை அனுப்பி வைத்தனர். ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிரிசில்டா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டி. என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். டி. என்.ஏ பரிசோதனையில் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தனது நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அத்தகைய யூடியூப் சேனல்கள் தங்களை பற்றி அவதூறான வீடியோக்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் எழுத்துபூர்வமான வாதங்களை வரும் 14 ம் தேதி தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story