“ஆண்பாவம் பொல்லாதது” பெண்களுக்கு எதிரான படமல்ல - ரியோ ராஜ்

ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னையில் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், நடிகர் ரியோ ராஜ் “பெண் பாவம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டனர். ஆண்கள் பற்றி பேசலாமே என்று தான் இந்த படம் எடுத்தோம். திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் பிரச்னைகளை ஆண்கள் சைடில் இருந்து பேசியிருக்கிறோம். பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக இருந்தாலும் சீரியஸான சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறோம்.மகளிர் ஸ்டேஷனுக்குள் சென்றாலே, ஆண்கள் அக்யூஸ்ட், பெண்கள் விக்டிம் என இருக்கிறது. இந்த படம் அதுப்பற்றியும் பேசுகிறது. பெண்ணியம் பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இது பெண்களுக்கு எதிரான படம் கிடையாது, அதே நேரத்தில் ஆண்களுக்கு சப்போர்ட்டிவான படம். பெண்களை கவர்கிற வகையில், அவர்களின் கருத்தை சொல்லும்வகையிலும் சீன்கள் இருக்கிறது. ஹீரோயின் மாளவிகா மனோஜ் சிறப்பாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேசும் முக்கியமான வேடத்தில் வருகிறார். இந்த படத்தில் சித்துகுமார் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். படத்தில் உதவி இயக்குனராகவும் வேலை செய்து இருக்கிறேன். இந்த நேரத்தில் என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி. இந்த படம் பார்க்கிற மனைவிமார்களுக்கு படம் பிடிக்கும். கணவர் மீது அன்பு அதிகமாகும்” என்று கூறினார்.
இயக்குனர் கலையரசன் கூறுகையில், “இப்படத்தை எடுக்கும் போது, இதற்காக பல கேஸ்களை படித்தோம். பல இடங்களில் ஆண்களுக்கு அநீதிகள் நடப்பது தெரிந்து, அதை படத்தில் சொல்லிவிட வேண்டும் என கதை எழுதியுள்ளோம். இந்த படம் பார்த்தப்பின், நிச்சயம் ஆண்களை பார்க்கும் கண்ணோட்டம் மாற வாய்ப்புள்ளது. படம் வெளியானப்பின், பாடல்கள் பேசப்படும். சென்சாரில் படத்தில் எந்தவித 'கட், மியூட்' இல்லாமல் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் 2 மணிநேரம் 3 நிமிடம்” என்றார்.






