ரிஷப் ஷெட்டியின் "காந்தாரா 2" படப்பிடிப்பு நிறைவு
ரிஷப் ஷெட்டி நடித்த ‘காந்தாரா 2’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம்'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகிரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் 3 விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். இதில் அவர் ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த வெற்றியை தொடர்ந்து காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று அறிவித்த படக்குழு, அதற்கு காந்தாரா: சாப்டர் 1 என்று டைட்டில் வைத்துள்ளது. இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
இந்தப் படம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில், கடம்ப வம்ச ஆட்சியின் பின்னணியில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பூதகோலா ஆட்டத்தின் ஒரு பகுதியாக வணங்கப்படும் பஞ்சுர்லி தெய்வத்தின் பூர்வீகத்தை இந்தப் படம் பேசும் என்கிறார்கள்.
இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. படத்தில் வேலைப்பார்த்த சிலரின் மரணங்கள் அடுத்தடுத்து நடந்தது. இது காந்தாரா திரைப்படத்தால்தான் இவ்வாறு நடக்கிறது என பேச்சுகள் திரைவட்டாரத்தில் பேசப்பட்டது.
தற்போது 'காந்தாரா 2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







