தென்னிந்திய ரசிகர்கள் பாலிவுட் படங்களை பார்ப்பதில்லை - சல்மான் கான் வருத்தம்


தென்னிந்திய ரசிகர்கள் பாலிவுட் படங்களை பார்ப்பதில்லை - சல்மான் கான்  வருத்தம்
x

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

பான் இந்தியா என தென்னிந்தியப் படங்களும் இந்திய அளவில் வரவேற்பைப் பெற ஆரம்பித்துவிட்டன. அப்படங்களில் சில 1000 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்து இந்தித் திரையுலகத்தையும் மாற்றிவிட்டது. தென்னிந்தியப் படங்களின் தாக்கத்தால் இந்தி சினிமா ரசிகர்களும் மாறுபட்ட படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால், இந்திப் படங்களுக்கான வரவேற்பும் குறைந்தது. அதேசமயம், இந்தியில் எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் தென்னிந்திய அளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. அது முன்னணி இந்தி நடிகரான சல்மான்கானை வருத்தப்பட வைத்துள்ளது.

இந்த படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. நேற்று வரை சுமார் சுமார் ரூ 4 கோடி அளவுக்குதான் டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சல்மான் கான் சமீபத்திய பேட்டியில் "இங்கு தென்னிந்தியப் படங்களை எப்போதுமே வரவேற்கிறோம். அதேசமயம் அங்கு இப்படி நடப்பதில்லை. நாங்கள் அவர்களது படங்களைப் போய் பார்க்கிறோம். ஆனா, அதுபோல அவர்கள் எங்களது படங்களை வந்து பார்ப்பதில்லை. தென்னிந்தியாவில் கடை கோடியில் சென்றால் கூட ரசிகர்கள் எங்களைத் தெரிந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். ஆனால், அவர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைப்பது சவாலாக உள்ளது. ரஜினிகாந்த், ராம் சரண், சூர்யா ஆகியோரது படங்களை பாலிவுட் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால், அதே போன்ற அன்பை அவர்கள் இந்திப் படங்கள் மீது காட்டுவதில்லை.இத்தனைக்கும் நான் தென்னிந்திய இயக்குனர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோருடன் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். எனது படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும்போது அவை வெற்றி பெறுவதில்லை. தென்னிந்திய நடிகர்களை பெரும் அளவிலான ரசிகர்கள் தொடர்வதே இதற்குக் காரணம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story