இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் "மதராஸி" படத்தை கிண்டலடித்த சல்மான்கான்


இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதராஸி படத்தை கிண்டலடித்த சல்மான்கான்
x
தினத்தந்தி 13 Oct 2025 4:53 PM IST (Updated: 13 Oct 2025 6:11 PM IST)
t-max-icont-min-icon

சிக்கந்தர் படப்பிடிப்புக்கு சல்மான்கான் தாமதமாக வந்ததாக முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் "சிக்கந்தர்". இந்த படம் எதிர்பார்த்த அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையில் "சிக்கந்தர்" படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், “சிக்கந்தர் படப்பிடிப்பில் பல நெருக்கடிகள் இருந்தன. சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும். எல்லாமே கம்யூட்டர் கிராபிக்ஸிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்ன செய்ய முடியும்?” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிக்கந்தர் படப்பிடிப்புக்கு சல்மான்கான் தாமதமாக வந்ததாக முருகதாஸ் பேட்டிகளில் கூறியிருந்த நிலையில், இந்தி பிக்பாஸ் (19-வது சீசன்) நிகழ்ச்சியில் மதராஸி படத்தை கிண்டலடித்து சல்மான்கான் பேசியுள்ளார். அதாவது, " சிக்கந்தர் படப்பிடிப்பில் நான் இரவு 9 மணிக்குத்தான் கலந்து கொண்டேன். முருகதாஸ் `மதராஸி' என ஒரு படம் எடுத்தார். அதில் நடித்த ஹீரோ காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவார். ஆனால், அந்தப் படம் சிக்கந்தரை விட பெரிய `ப்ளாக் பஸ்டர்' ஆகிவிட்டது'' என்று கிண்டலடித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. ரூ. 150 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மதராஸி படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததை தான் பிளாக்பஸ்டர் என்று கேலியாக சொல்லியிருக்கிறார் என பேசப்படுகிறது.

1 More update

Next Story