புது படங்களை பின்னுக்குத் தள்ளி.. வசூலில் சாதனை படைக்கும் 'மங்காத்தா'

புதிய திரைப்படத்திற்கு கிடைக்கும் அளவிற்கு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்திற்கு வசூல் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘மங்காத்தா’ அமைந்து இருந்தது.
இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 23ந் தேதி ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. ‘மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
புதிய திரைப்படத்திற்கு கிடைக்கும் அளவிற்கு ரீ ரிலீஸாகியுள்ள மங்காத்தா படத்திற்கு வசூல் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மங்காத்தா படம் ரீ ரிலீஸில் இதுவரை ரூ. 17.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 16 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஓப்பனிங் வசூலில் ரீ ரிலீஸில் இதுவரை வெளிவந்த படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் மங்காத்தா அடித்து நொறுக்கியுள்ளது.






