சுரேஷ் கிருஷ்ணாவின் “அனந்தா” டீசர் வெளியீடு
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அனந்தா’ படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘அனந்தா’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அனந்தா’ படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் விழா நிகழ்ச்சியில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா “ அனந்தா படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சாய் பாபா என்னுடைய கனவில் தோன்றினார் . இந்தப் படம் புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பாபா கனவில் தோன்றினார்.சாய் பாபா கனவில் தோன்றியது குறித்து நான் என்னுடைய நண்பரிடம் கூறினேன். அவர் நேற்று தான் நாங்கள் சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம் என்றார். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு சாய் பாபா இருக்கிறார். எப்போதும் என்னை சுற்றியே என்னை அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு எண்ணம் தோன்றுகிறது.அதன் பிறகு தான் அனந்தா படத்திற்கான கதையை எழுதினேன். அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நான் அந்தக் கதையை எழுதி முடித்துவிட்டேன்” என்றார்.
அனந்தா படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.







