நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பில்லை - சிபிஐ அறிக்கை

சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார்.
மும்பை,
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பந்த்ரா பகுதியிலுள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நடிகர் சுஷாந்தின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது.
சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்து, ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது. அறிக்கைப்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை. சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்






