மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி - போலீசார் அதிர்ச்சி தகவல்

தயாரிப்பாளர் கேபி சவுத்ரி துாக்கிட்ட நிலையில் நேற்று கோவா வீட்டில் இறந்து கிடந்தார்.
கோவா,
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி(44 வயது). இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.
இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து, அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதனடிப்படையில் அவரது வீட்டில் சோதனைசெய்து பார்த்ததில் போலீசார் ஒரு கடிதத்தை மீட்டனர். அதில், மனஅழுத்தம் காரணமாக கே.பி.சவுத்ரி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடலை தமிழ்நாட்டில் உள்ள தனது அம்மாவிடம் ஒப்படைக்குமாறு அதில் கே.பி.சவுத்ரி எழுதி இருப்பதாகவும் கூறினர். கே.பி.சவுத்ரியின் குடும்பத்தினர் கோவாவிற்கு வந்த பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
2023ம் ஆண்டில், போதைப்பொருள் விற்பனை செய்ததாகக் கூறி கேபி சவுத்ரி காவல்துறையால் கைது செய்யப்பட்டு,பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.