ஓசூரில் பரபரப்பு: இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வந்த ரசிகர்கள் வாக்குவாதம்


ஓசூரில் பரபரப்பு: இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வந்த ரசிகர்கள் வாக்குவாதம்
x

இளையராஜாவின் இசை கச்சேரியை காண ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காளஸ்திபுரம் பகுதியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரிக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்தும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் ஆன்லைனில் பதிவு செய்து கச்சேரியை காண ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

ஆனால், உள்ளே இடமில்லை என பதிவு செய்த ரசிகர்களை அரங்கின் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கச்சேரி நடந்த அரங்கு நுழைவுவாயில் பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், 2 மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தும், தற்போது உள்ளே இடம் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை. மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே வந்து காத்து கிடக்கிறோம். அனுமதி இல்லை என்றால் எப்படி? எங்களுக்கு பணத்தை திருப்பி தாருங்கள் என கூறி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெறும் உள்பகுதிக்கு செல்ல முடியாமல் கூச்சலிட்டபடி அங்கேயே தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, காத்திருந்த அனைத்து ரசிகர்களும் அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இளையராஜாவின் இன்னிசை கச்சேரியை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

1 More update

Next Story