குழந்தை என்னுடையதுதான்.. ஒத்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்றும்; ஜாய்க்கு பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருந்தார்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார் அளித்தார். ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா ஆஜராகி புகைப்படங்கள், செல்போன் உரையாடல் அனைத்தையும் கொடுத்து அதிகாரிகள் கேட்ட கேள்விக்கும் மணிக்கணக்கில் விளக்கம் அளித்தார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதும், தனது புகாரை விசாரிக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். தனது வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா உடன் மாநில மகளிர் ஆணையத்துக்கு சென்ற ஜாய் கிரிசல்டா, தனது தரப்பு விளக்கங்களை தெரிவித்தார். புகார் தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்டா இருவருக்கும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தனக்கு மாதா மாதம் ஆறரை லட்சம் ரூபாய் பராமரிப்பு செலவுக்கு ரங்கராஜ் வழங்க வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகனின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டு, தந்தை பெயர் மாதம்பட்டி ரங்கராஜ் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை ரங்கராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார். அதாவது மகளிர் ஆணையம் வெளியிட்டிருக்கும் விசாரணை அறிக்கையில், “ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை ரங்கராஜ் விசாரணையின்போது ஒத்துக்கொண்டார். கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையும் தன்னுடையதுதான் என்றும் ஒத்துக்கொண்டார். ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையை சட்ட விரோதமானது என்றோ முறைகேடானது என்றோ சொல்ல முடியாது. அந்தக் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பும் ரங்கராஜுக்கு உண்டு. வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்க கூடாது.குழந்தை தன்னுடையதுதான் என்று ஒத்துக்கொண்டதால் டிஎன்ஏ சோதனை போன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் தேவையில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம், சென்னை காவல் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. அது போல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.






