அடுக்குமாடி குடியிருப்பில் வீசிய துர்நாற்றம்: பூட்டிய வீட்டில் பிரபல நடிகை பிணமாக மீட்பு


அடுக்குமாடி குடியிருப்பில் வீசிய துர்நாற்றம்: பூட்டிய வீட்டில் பிரபல நடிகை பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2024 4:48 PM IST (Updated: 10 Jun 2024 5:33 PM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகை வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

மும்பை,

பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (வயது 37). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார்.

நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர் மலபிகா தாஸ் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், மலபிகா தாஸ் தங்கி இருந்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு நடிகை மலபிகா தாஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இந்தி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story