தேதியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள், நாங்கள் இல்லை...ஓடிடியை சாடும் ''குபேரா'' தயாரிப்பாளர்

'குபேரா' படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், ஓடிடி தளங்களை தயாரிப்பாளர் சுனில் நரங் சாடி இருக்கிறார்.
சென்னை,
'குபேரா' படத்தை ஜூலை மாதம் வெளியிட கோரியநிலையில், ஜூன் 20-ம் தேதியே வெளியிட ஓடிடி தளம் வலியுறுத்தியதாகவும், தாமதமானால் தொகையில் இருந்து ரூ.10 கோடி குறைக்கப்படும் என்று எச்சரித்ததாகவும் தயாரிப்பாளர் சுனில் நரங் தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் , ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்த 'குபேரா' படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், ஓடிடி தளங்களை தயாரிப்பாளர் சுனில் நரங் சாடி இருக்கிறார்.
அவர் கூறுகையில், "ஓடிடி தளங்கள் ரிலீஸ் தேதியை முடிவு செய்கின்றன. ஜூலை மாதத்தில் ஒரு தேதியைக் கேட்டோம். ஆனால் அவர்கள் ஜூன் 20 அன்று வெளியிடச் சொன்னார்கள். இல்லையென்றால், ஒப்புக்கொண்ட தொகையிலிருந்து 10 கோடியைக் குறைப்பதாகச் சொன்னார்கள்.
இப்போது, இந்த தளங்களை நம்பி நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம். மெதுவாக, அவர்கள் சினிமாவின் ராஜாக்களாக மாறி வருகின்றனர். படம் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்றார்.