தோட்டாதரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு


தோட்டாதரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2025 3:19 PM IST (Updated: 11 Nov 2025 3:21 PM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

64 ஆண்டுகளாக கலை வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்தி இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக விளங்குகிறார் தோட்டா தரணி.மும்பை முதல் அமெரிக்கா வரையிலான உலகின் பல பகுதிகளை, சென்னையிலேயே உருவாக்கி, ரசிகர்களை திருப்திப்படுத்தி வெற்றி கண்டவர் தோட்டா தரணி. நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி பகுதி, காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்க காட்சிகள் உள்ளிட்டவை சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டவை என்றால், நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது தோட்டா தரணியின் கலை இயக்கம். நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், செவாலியர் விருது பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதை சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட சிலர் பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் வரும் 13ம் தேதி ‘லா மேசான்’ என்ற நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்கிடையே அங்கு, தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. வரும் 14-ம் தேதி வரை இக்கண்காட்சி அங்கு நடைபெறும். ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான இக்கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story