பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மீது டிக்டாக் இலக்கியா குற்றச்சாட்டு

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, புலி, தெறி, வாரிசு, கோட், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, காப்பான், தீரன், வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு சமூகவலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
திலீப் சுப்பராயன் மீது இலக்கியா பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திலீப் சுப்புராயன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ளதால் இது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது.
இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ளதாவது : "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்" என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இலக்கியா போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.






