விஜய் தேவரகொண்டாவுடனான படம் நிறுத்தப்பட்டது ஏன்? ...மனம் திறந்த மாளவிகா மோகனன்

‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் மாளவிகா தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.
சென்னை,
ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகளாக சினிமாவில் அறிமுகமான மாளவிகா, மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள அவர், பெரிய படங்களில் அதிகமாக நடிக்காதபோதும், சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
மாருதி இயக்கத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் மாளவிகா தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.
உண்மையில், மாளவிகாவின் தெலுங்கு அறிமுகம் எப்போதோ நடக்க இருந்தது. தமிழ் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா – மாளவிகா இணைந்து நடிக்க இருந்த படத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பும் முடிந்திருந்த நிலையில், அதிக செலவு மற்றும் தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தை கைவிட்டதாக அப்போது செய்திகள் வெளியானது.
தற்போது ‘ராஜா சாப்’ படத்தின் விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சமீபத்திய ஒரு நேர்காணலில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசினார்.
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க இருந்த படத்தின் கதை மிகவும் நன்றாக இருந்ததாகவும், காதல் கதையாக இருந்ததால் உடனடியாக அந்தப் படத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். விஜய் தேவரகொண்டா ஏற்கனவே தனக்கு நல்ல நண்பராக இருந்ததாலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருந்ததாலும், எந்த தயக்கமும் இல்லாமல் சம்மதித்ததாக கூறினார்.
ஆனால், விஜய் தேவரகொண்டா அந்தப் படத்திற்குப் பதிலாக ‘லிகர்’ படத்தில் நடிக்க விரும்பியதால், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் ‘சலார்’ குழு தன்னை அணுகியதாகவும், ஆனால் தேதிகள் பொருந்தாததால் அந்த வாய்ப்பும் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.






