விவேக் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட்ட மனைவி


விவேக் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட்ட மனைவி
x

நடிகர் விவேக்கின் 65-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும், சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவருமான விவேக் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். சினிமா தாண்டி மரக்கன்று நடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த விவேக்கின் 65-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அவரது மனைவி அருட்செல்வி சென்னை சாலிகிராமத்தில் மரக்கன்றுகள் நட்டார். மேலும் மரக்கன்றுகளை போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அவர் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘விவேக்கின் 65-வது பிறந்தநாள் இன்று (நேற்று). தனது பிறந்தநாளில் மரக்கன்று நடுவதும், அன்னதானம் தருவதும் அவரது மனதுக்கு பிடித்த விஷயம். அவர் மறைந்தாலும், அவருக்கு பதிலாக அதை நான் செய்துகொண்டிருக்கிறேன்.

சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். அதை நல்லபடியாக வளர்த்து கொண்டுவருவோம். விவேக் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மரக்கன்றுகள் நட்டு வந்தார். அவரது நினைவுகளாய் பல இடங்களில் மரங்கள் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. 1 கோடி மரக்கன்று நடுவது என்பது விவேக்கின் கனவுத்திட்டம். அந்த திட்டம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும், முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு தான் இருக்கிறோம்'' என்றார்.

1 More update

Next Story