பாலிவுட்டில் இறுக்கமான ஆடைகளை அணியச்சொல்லி கட்டாயம் - ராதிகா ஆப்தே பரபரப்பு

பாலிவுட் சினிமாவில் அரங்கேறும் இந்த கொடுமையான போக்கு மாறவேண்டும் என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
சென்னை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கபாலி', 'வெற்றிச்செல்வன்', 'சித்திரம் பேசுதடி-2', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் இங்கிலாந்தை சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். இவருக்கு கடந்த ஆண்டில் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் பாலிவுட் சினிமா குறித்த பரபரப்பு கருத்துகளை ராதிகா பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, ''நான் கர்ப்பமாக இருந்த சமயம், ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். நான் கர்ப்பவதி என்று தெரிந்தும், இறுக்கமான ஆடைகளை அணியச்சொல்லி முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் கட்டாயப்படுத்தினார். நானும் வேறு வழியின்றி நடித்தேன்.
என்னை போல பலருக்கும் இது நடந்துள்ளது. நாங்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கவில்லை. கொஞ்சம் பச்சாதாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம். பாலிவுட் சினிமாவில் அரங்கேறும் இந்த கொடுமையான போக்கு மாறவேண்டும்'', என்றார்.






