நடிகர் ரவி மோகன் சொத்து முடக்கப்படுகிறதா? - மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி

நடிகர் ரவி மோகன் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை,
தங்களது படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ.6 கோடியை திருப்பித் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதேபோல கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி அந்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகனும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையில், ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு , படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் தாக்கல் செய்ய ரவிமோகனுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாததால் நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்யக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.






