காமன்வெல்த் போட்டி: 22 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா - பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிப்பு


காமன்வெல்த் போட்டி: 22 தங்கத்தை கைப்பற்றியது இந்தியா - பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிப்பு
x

Image Courtesy : @Media_SAI

தினத்தந்தி 8 Aug 2022 5:55 PM IST (Updated: 8 Aug 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

பேட்மிண்டனில் இன்று பி.வி. சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

விளையாட்டு போட்டிகளின் இறுதி நாளான இன்று இந்தியா பேட்மிண்டன் போட்டியில் அசத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதை தொடர்ந்து நடந்த பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். அதே போல் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இதை தவிர இந்தியா 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக இன்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் லக்சயா சென் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். முன்னதாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

20 வயதே ஆன லக்சயா சென் முன்னணி வீரர்களை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது மட்டுமின்றி இந்திய அணிக்கு இன்று மேலும் சில போட்டிகள் எஞ்சியுள்ளன. குறிப்பாக ஆண்கள் ஆக்கி இறுதி போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

அதிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் அணியின் தங்கப் பதக்க எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. 22 தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 19 தங்கப் பதக்கத்தை வென்றுள்ள நியூசிலாந்து அணி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

1 More update

Next Story