காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் குவியும் வாழ்த்துக்கள்


காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் குவியும் வாழ்த்துக்கள்
x

காமன்வெல்த் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் உயரம் தாண்டுதலில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது தான்.

நியூசிலாந்தின் ஹாமிஷ் கெர் தங்கப்பதக்கமும் (2.25 மீட்டர்), ஆஸ்திரேலியாவின் பிரான்டன் ஸ்டார்க் வெள்ளிப்பதக்கமும் (2.25 மீட்டர்) பெற்றனர். பிரான்டன் ஸ்டார்க் பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் தம்பி ஆவார். தேஜஸ்வின் சங்கர் தனது சிறந்த செயல்படாக 2.29 மீட்டர் வரை உயரம் தாண்டி இருக்கிறார். அதே போன்று எகிறியிருந்தால் அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்திருக்கும்.

23 வயதான தேஜஸ்வின் சங்கருக்கு தொடக்கத்தில் இந்திய அணியில் இடம் கொடுக்க இந்திய தடகள சம்மேளனம் மறுத்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

வழக்கறிஞர் தம்பதியின் மகனான தேஜஸ்வின் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவரது பூர்வீகம் திருச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்வின் சங்கர் கூறுகையில், 'இந்த காமன்வெல்த் விளையாட்டில் தடகளத்தில் பதக்க கணக்கை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வீட்டிற்கு ஏதோ ஒரு பதக்கத்துடன் திரும்புவது பரவசமளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி' என்றார்.

அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்து விட்டார். காமன்வெல்த் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் நமது முதல் பதக்கத்தை அவர் வென்று இருக்கிறார். அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பெருமை அளிக்கிறது. எதிர்கால போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

மற்ற போட்டிகளை பொறுத்தமட்டில், தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோவில் 78 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை துலிகா மான், ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை எதிர்கொண்டார். தொடக்கத்தில் அசத்திய துலிகா மான் எதிராளியின் கால்களை இடறி விட்டு அவரை மடக்கி ஒரு புள்ளி பெற்றார். ஆனால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் எழுச்சி பெற்ற சாரா அட்லிங்டன், கடைசி 35 வினாடிகள் இருக்கும் போது துலிகா மானை கீழே சாய்த்து நிமிர விடாமல் அடக்கி வெற்றிக்கனியை தட்டிப்பறித்தார். இதனால் டெல்லியைச் சேர்ந்த 23 வயதான துலிகா மானுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. ஜூடோவில் இந்தியா பெற்ற 3-வது பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான பளுதூக்குதலில் 109-க்கும் மேலான அதிக எடைப்பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் குர்தீப் சிங் ஸ்னாட்ச் முறையில் 167 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 223 கிலோ என்று மொத்தம் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். பாகிஸ்தானின் முகமது நூ பட் தங்கப்பதக்கமும் (405 கிலோ) நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ (394 கிலோ) வெள்ளிப்பதக்கமும் பெற்றனர்.

26 வயதான குர்தீப்சிங், பஞ்சாப்பில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் இந்த முறை பதக்கம் வென்று பரிகாரம் தேடிக் கொண்டார்.

இந்தியா இந்த முறை பளுதூக்குதலில் மட்டும் 10 பதக்கங்களை (3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்) அறுவடை செய்திருக்கிறது. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா கைப்பற்றியுள்ள அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான். 2018-ம் ஆண்டில் பளுதூக்குதலில் இந்தியா 9 பதக்கம் வென்றதே முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

நடப்பு தொடரில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 48 தங்கம், 38 வெள்ளி, 39 வெண்கலம் என்று மொத்தம் 125 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என்று 18 பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது.


Next Story