காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் ஜெய்ஸ்மின்
ஜெய்ஸ்மின் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
7-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை பெண்களுக்கான லைட்வெயிட் 60 கிலோ எடை பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா நியூசிலாந்தின் டிராய் கார்டனை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் ஜெய்ஸ்மின் 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ஜெய்ஸ்மின் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் (இந்தியா) 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்.