காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 7-வது பதக்கம்- ஜூடோவில் வெள்ளி வென்றார் சுசிலா தேவி


காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 7-வது பதக்கம்- ஜூடோவில் வெள்ளி வென்றார் சுசிலா தேவி
x
தினத்தந்தி 1 Aug 2022 4:54 PM GMT (Updated: 1 Aug 2022 5:06 PM GMT)

இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்தது.

அதே போல் இன்று முன்னதாக நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுசிலா தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இன்றைய தினத்தில் இந்திய அணி முதல் பதக்கத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.


Next Story