காமன்வெல்த்: பார்வையாளர்கள் அரங்கு மீது சைக்கிளுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்த வீரர்கள்...! - அதிர்ச்சி சம்பவம்


தினத்தந்தி 1 Aug 2022 4:14 AM GMT (Updated: 1 Aug 2022 4:14 AM GMT)

காமன்வெல்த் சைக்கிளிங் போட்டியில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.

லண்டன்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, காமன்வெல்த் தொடரில் ஆண்கள் உள்அரங்கு சைக்கிளிங் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று லண்டன் லி வேலி விலொ பார்க்கில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இதில், இந்திய வீரர் விஷிஹவ்ஜூத் சிங் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பந்தைய ஓடுதளத்தை சைக்கிளிங் வீரர்கள் 10 சுற்றுகளாக கடக்க வேண்டும்.

இந்நிலையில், போட்டியின் 10-வது மற்றும் கடைசி நடைபெற்றுக்கொண்டிருந்தது. வீரர்கள் வேகமாக சைக்கிளை இயக்கி ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது, ஓடுதளத்தில் முன்னே சென்ற சைக்கிள் மீது மற்றொரு சைக்கிள் மோதியது. இதனால், அடுத்தடுத்து வந்த சைக்கிள்கள் ஒன்றபின் ஒன்று மீதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

வீரர்கள் சைக்கிள்களை வேகமாக ஓட்டிவைத்ததால் அதை கட்டுப்படுத்த முடியாமல் போனது. சில வீரர்கள் தங்கள் சைக்கிளுடன் மின்னல் வேகத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த அரங்கு மீது பாய்ந்தனர். இந்த கோர விபத்தில் சைக்கிளிங் விளையாட்டில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற மேட் வால்ஸ் மற்றும் பிற வீரர்கள் மேட் பொஸ்டாக், கிரீக் கி ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

பார்வையாளர்கள் அரங்கு மீது வீரர்கள் சைக்கிளுடன் பாய்ந்ததால் அங்கு விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்த சிலருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் சைக்கிளிங் விளையாட்டில் பெரும் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story