காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்


காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள்
x

2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் குத்து சண்டை வீரர்கள் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.



பிர்மிங்காம்,



இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் 2 பேர் சென்று உள்ளனர்.

சுலேமான் பலூச் மற்றும் நசீர் உல்லா ஆகிய அந்த 2 பேர் தங்களது பயிற்சியாளரிடம் கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் திரும்பவில்லை. கடைசியாக அவர்கள் இருவரும் கடந்த செவ்வாய் கிழமை காலை சிற்றுண்டியின்போது, சக வீரர்களை சந்தித்து உள்ளனர்.

இதன்பின் அவர்கள் காணாமல் போன நிலையில், குத்து சண்டை வீரர்கள் இருவரின் அறையின் பூட்டை உடைத்து, அதிகாரிகள் உள்ளே சென்றனர். ஆனால், அவர்களது உடைமைகள் உள்ளே இருந்துள்ளன. அவர்களை காணவில்லை. இதுபற்றி இங்கிலாந்து அரசிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஒலிம்பிக் கூட்டமைப்பும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து வீரர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இன்று நாடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்கள் காணாமல் போயுள்ளனர். இதனால், அவர்கள் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் குழு நாட்டுக்கு புறப்பட்டது.

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கை வீரர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 3 பேரை பின்னர் போலீசார் கண்டறிந்தனர். இந்த சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.


Next Story