மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு


மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
x
தினத்தந்தி 19 March 2023 1:30 AM GMT (Updated: 19 March 2023 1:30 AM GMT)

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

ணர்ச்சி நுண்ணறிவு (எமோஷனல் இன்டலிஜென்ஸ்) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.


Next Story