சேலம் அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரம்: மாணவிகள் திடீர் போராட்டம்


சேலம் அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரம்: மாணவிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:50 PM GMT (Updated: 9 Oct 2023 7:16 AM GMT)

அரசு பள்ளியில் குடிநீரில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் முட்டி போட சொன்னதாக கூறி மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.

சேலம்

குடிநீரில் புழுக்கள்

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்ததாகவும், அதில் புழுக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் கூறியபோது மாணவியை முட்டி போட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியானது.

நேற்று காலை வழக்கம் போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி வளாகத்தில் திரண்டனர். பள்ளியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும். மாணவியை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன், தொடக்க கல்வி அதிகாரி சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகள் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் குடிநீர் தொட்டியில் பிடித்த தண்ணீரில் புழுக்கள் இருந்துள்ளது. அதனை ஒரு மாணவி தலைமை ஆசிரியையிடம் கூறியுள்ளார். அதை சரிசெய்வதை விட்டு விட்டு அவர் மாணவியை முட்டி போட வைத்துள்ளார். இது எந்த வகையில் நியாயம் என்றனர். மேலும் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. அதனை சரிசெய்து தர வேண்டும். மாணவியை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து ேபச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியை

அப்போது பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி கூறுகையில், 'மாணவியை நான் முட்டி போட சொல்லவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை. நீங்கள் என்னை தவறுதலாக நினைத்தால் அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்' என்றார். இதைத்தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர். மாணவிகள் போராட்டத்தால் நேற்று பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story