புனித யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் - பங்குத்தந்தை இ.அந்தோணி ராஜ், உதவி அதிபர் தந்தை அலெக்ஸ் ஆனந்த ராஜ் மற்றும் அருட்சகோதரிகள் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறவர், இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயுவிற்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்தத் திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
பிரசித்தி பெற்ற திருத்தூதர் யூதா ததேயு திருத்தலத்தின் 48-வது ஆண்டு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, திருச்செபமாலை மற்றும் புனிதரின் நவநாள் செபமும் நடந்தது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிகழ்வும் நடைபெற்றது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் பங்கு பணியாளர்களும், அருட்தந்தையர்களுமான ஏ.மார்ட்டின் ஜோசப், மைக்கேல் சுரேஷ், டெர்ரி ஸ்டீபன், ஜோசப் மாணிக்கம், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) நற்கருணை பெருவிழாவானது, 'இறைவிருந்து துயருறும் மாந்தரின் அருமருந்து' என்ற மைய சிந்தனையில் நடைபெறுகிறது. அந்த வகையில் மாலை 6 மணிக்கு திருச்செபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம் நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயரும், இறையரசு சபை நிறுவனருமான பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி நடைபெறுகிறது. இறுதியில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடக்கிறது.
3-ம் நாளான 25-ந்தேதி (சனிக்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. 'புனிதரின் தேர் வலம் வரட்டும், இறை மக்களின் வாழ்வு வளம் பெறட்டும்' என்ற மைய சிந்தனையில் நடைபெறும் திருவிழாவில், மாலை 6 மணிக்கு திருச்செபமாலை மற்றும் புனிதரின் சிறப்பு நவநாள் செபம். மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு, திருத்தேர் பவனி நடைபெற இருக்கிறது. கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயரான டாக்டர் எப்.அந்தோணிசாமி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும்.
4-ம் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பேரருட் தந்தை, பா. எஸ்தாக்கியூஸ் (செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொது பதில் குரு) தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது. ஜெசியூட்ஸ் பிலாசபிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூசன், சத்திய நிலையம், சென்னை இயக்குனரான அருட்தந்தை. வலேரியன் திருப்பலியை நடத்துகிறார்.
அதனைத்தொடர்ந்து நன்றி பெருவிழா மற்றும் திருக்கொடியிறக்கம் நிகழ்வு நடைபெற உள்ளது. அதன்படி, மாலை 6 மணிக்கு திருச்செபமாலை, புனிதரின் சிறப்பு நவநாள் செபமும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர நன்றி திருப்பலி மற்றும் திருக்கொடியிறக்கம் நிகழ்வு நடைபெற உள்ளது. குரோம்பேட்டை புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தை ஞா. பாக்கிய ரெஜிஸ் (மறைமாவட்ட ஆயரின் மேனாள் பொது பதில் குரு) தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் - பங்குத்தந்தை இ.அந்தோணி ராஜ், உதவி அதிபர் தந்தை அலெக்ஸ் ஆனந்த ராஜ் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.






