ஆடித்திருவிழா: கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்


ஆடித்திருவிழா: கள்ளழகர் தேரோட்டம் கோலாகலம்
x

விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடங்கள் எடுத்து வந்து 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்தனர்.

மதுரை

மதுரை அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடிப்பெருந்திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கியமானவை. இதில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடி விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகராகிய சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளியதும், பக்தர்கள் வடம் பிடித்து ‘கோவிந்தா, கோவிந்தா...’ என பக்தி கோஷங்கள் எழுப்பி தேர் இழுத்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அழகர் மலை அடிவாரத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. காலையில் புறப்பட்ட தேர், மதியம் நிலையை அடைந்தது விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சந்தனக்குடங்கள் எடுத்து வந்து 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சாத்துபடி செய்து தரிசனம் செய்தனர். பொங்கலிட்டும் வழிபட்டனர்.

அழகர்மலையில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன், 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து நெய் விளக்குகள் ஏற்றி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் புஷ்ப சப்பரத்தில் அழகர் வீதி உலா வருகிறார். நாளை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

1 More update

Next Story