அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது - பனிலிங்கத்தை தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள்

Image Courtesy : PTI
பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ந்தேதி (இன்று) தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. முன்பதிவு அடிப்படையில் யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று சோன்மார்க்கில் உள்ள பல்தால் மற்றும் பஹல்காமில் உள்ள நுன்வான் ஆகிய 2 முகாம்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க யாத்திரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.






