திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்


திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர  அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
x

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை மந்திரி ஆனம் ராமநாராயண ரெட்டி சமர்ப்பித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அறநிலையத்துறை மந்திரி ஆனம் ராம நாராயண ரெட்டி பங்கேற்று அரசு சார்பில் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரங்களை வெள்ளித்தட்டில் வைத்து தலையில் சுமந்தவாறு மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழுங்க ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தார். அதன்பிறகு அவர், பத்மாவதி தாயாரை வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக கோவிலுக்கு வந்த மந்திரியை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் அர்ச்சகர்கள், பிற துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவிலில் இருந்து வெளியே வந்ததும் மந்திரி ஆனம் ராம நாராயண ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

பத்மாவதி தாயாரின் அருளால், ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கும் தெய்வீக வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தலின் பேரில், மாநிலத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். அதன் மூலம் பல்வேறு கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.

வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு திருச்சானூர் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார். அதற்காக திருப்பதி, திருச்சானூர், திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரி கிரிதர், உதவி பறக்கும் படை அதிகாரி ராதாகிருஷ்ண மூர்த்தி, கோவில் உதவி அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story