வேட்டவலம் முருகர் கோவில்களில் ஆவணி மாத கிருத்திகை விழா

சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த வேட்டவலம் முருகப்பெருமான்
ஆவணி மாத கிருத்திகை சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் மலை மீது வீற்றிருக்கும் சிங்காரவேல் முருகன் கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர் விபூதி, நெய், நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, முருகர் பற்றிய துதிப்பாடல்கள் பாடி வழிபாடு செய்து மகா தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் வேட்டவலம் அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பாலசுப்ரமணியர் கோவிலிலும் கிருத்திகை விழா நடைபெற்றது. கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி வள்ளிதெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் ஆலயத்திலும், கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயத்தில் உள்ள முருகர் சன்னதியிலும் ஆவணி மாத கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.






