பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

இன்று தொடங்கிய திருவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்க இருக்கிறது.
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-வது ஆண்டு திருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கலந்துகொண்டு, 75 அடி உயர கொடிக் கம்பத்தில், 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த திருக்கொடியை ஏற்றினார்.
இதில் பங்கேற்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆலய வளாகத்தில் குவிந்தனர். கொடி ஏறும்போது, அனைவரும் 'மரியே வாழ்க' என்று முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியும் நடந்தது. இன்று தொடங்கிய இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்க இருக்கிறது.
விழாவை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி ஆலய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) 'திருப்பயணம்' என்ற தலைப்பில் மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு 'புனித கதவு' என்ற தலைப்பில் நற்கருணை பவனி ஆராதனை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடைபெறுகிறது. செப்டம்பர் 1-ந் தேதி (திங்கட்கிழமை) 'ஒப்புரவு' என்ற தலைப்பிலும், 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 'இறைவேண்டல்' என்ற தலைப்பிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன. இப்படி, வருகிற 8-ந்தேதி வரை தினமும் சிறப்பு திருப்பலிகள் நடக்க இருக்கிறது.
வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நம்பிக்கையின் விண்மீன் என்ற தலைப்பில் ஆடம்பர தேர்ப்பவனி மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. விழாவில் நிறைவாக 8-ந்தேதி (திங்கட்கிழமை) அன்னையின் பிறப்பு விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு கொடி இறக்க நிகழ்வு நடைபெறுகிறது.






