பிறந்தது மார்கழி மாதம்.. பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் வீதிஉலா

அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காணமுடிந்தது.
சென்னை,
மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்யவிரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் பலர் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி விட்டு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீடுகள் முன்பு கோலமிட்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காணமுடிந்தது. இதன்படி நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறுவர், சிறுமியர் முதல் முதியோர் வரை அனைவரும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். அதிகாலையில் ஒலிபெருக்கி மூலம் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழியில் பவுர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கை கோவிலிலும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் சேவூர் வாலீஸ்வரர் கோவிலிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது திருவாதிரைக்களி சிவபெருமானுக்குப் படைக்கப்படுகிறது.
திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும். அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மார்கழி மாத முதல் நாளிலிருந்து 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டுவாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள்.
இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம். இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு முன் மார்கழி மாதத்தில் வரும் 30 நாட்களும் வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். மார்கழி மாதம் முழுவதும் தினசரி கோலத்தின் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து மலர்களால் கோலத்தை அலங்கரிப்பார்கள். கோலத்தின் மீது தீபங்கள் வைத்தும் மார்கழி மாதத்தை வரவேற்பார்கள்.
இதனிடையே சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.
பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.
இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.
ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.






