அன்பு செலுத்தாமல் செய்யும் காரியங்களால் இறைவனிடம் சேர முடியாது

தேவனிடத்தில் அன்பாக இருப்பது என்பதன் பொருள், அவர் நமக்கு சொல்லிய வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதாகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மக்களுக்காக தம்முடைய ஜீவனையே தந்ததால், அவருடைய அன்பு உண்மையாகவே விளங்கியது. அவர் சிலுவையிலே மரித்து, உயிர்த்ததினாலே, மக்களின்மீது வைத்த தமது அன்பை பூரணமாக காண்பித்தார். இது கடவுளின் அன்பு தியாகத்தை உணர்த்துகிறது.
இயேசுவை நம்புகிற அனைவரும் அவருடைய சாயலால், அவரைப் போலவே மாறுகிறார்கள். ஆகவே, கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களிடத்திலும் உண்மையாக அன்பு பாராட்ட வேண்டும்.
“இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்”. (1 யோவான் 5:1)
தேவனிடத்தில் அன்பாக இருப்பது என்பதன் பொருள், அவர் நமக்கு சொல்லிய வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதாகும்.
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை”. (மாற்கு 12:30)
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்”. (மாற்கு 12:31)
முழு வேதாகமத்தின் மொத்த கட்டளைகளும் சுருக்கமாக இந்த வசனங்களில் அடங்கியுள்ளது. சக மனிதர்களை நேசிக்காமல் பகைத்துக் கொண்டு தேவனிடத்தில் அன்பு செய்யவே முடியாது. அன்பில்லாதவன் தேவனை அறியவே முடியாது.
“அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்”. (1 யோவான் 4:8)
“தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்". (1 யோவான் 4:16)
“தேவனிடத்தில் அன்புகூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமல் இருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:20)
தனக்கு அருகில் இருக்கிறவர்களிடத்தில் அன்பு செய்யாமல், காணாத இறைவனிடத்தில் அன்பு செய்கிறேன் என்பது இயலாத காரியமாகும். அதனால் தற்சமயம் மனிதர்களுடைய அன்பு குறைந்து கொண்டே வருகிறது.
வேதம் சொல்கிறது: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்”. (மத்தேயு 24:12) மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மை இல்லாதவர்களாக, அன்பில்லாதவர்களாக, அக்கிரம சிந்தனையுடன் செயல்பட்டுக்கொண்டே இறைவனிடத்தில் அன்பு செய்கிறேன் என்று சொல்வதில் எந்த பலனுமில்லை.
1 கொரிந்தியர் 13:1 முதல் 8 வரை தேவன் கூறும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்....
"நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்”.
“நான் தீர்க்க தரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல ரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசம் உள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை”.
“எனக்கு உண்டான யாவற்றையும் நான் தானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப் படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை".
“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது”.
“அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது".
“அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்”.
“சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்”.
“அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்க தரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்”.
வேத வசனங்கள் மிகத் தெளிவாக சொல்கிறது என்னவென்றால்: ஒருவர் தன் சொந்த சகோதரனிடத்தில் அக்கம், பக்கம் உள்ளவர்களிடத்தில், தன்னிடத்தில் வேலை பார்ப்பவர்களிடத்தில், அனைத்து சமூக மனிதர்களிடத்திலும் உண்மையான அன்பு செலுத்தாமல், பக்தியாக இருக்கிறேன் என்று கூறி, பிறருடைய கண்களுக்கு முன்பாக செய்யும் காரியங்கள் எல்லாம் நிச்சயமாக அவரை இறைவனிடத்தில் சேர்க்காது.
இறைவனிடத்தில் சேர வேண்டும் என்றால் முதலாவதாக அவரிடத்தில் அன்பு செய்ய வேண்டும், இரண்டாவதாக அவர் படைத்த, அவர் சாயலில் உள்ள அனைத்து மக்களிடத்திலும் உண்மையாக அன்பு செய்ய வேண்டும்.
வேதம் சொல்கிறது: “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருங்கள், அன்பு திரளான பாவங்களை மூடும்". (1 பேதுரு 4:8)
ஆகவே, தேவன் அன்பாக இருப்பது போலவே, நாமும் அவரிடத்திலும், இறைவனின் சாயலாக படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களிடத்திலும் அன்பு செய்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவோம், ஆமேன்.
-டாக்டர் ஒய். ஆர். மானெக்ஷா, நெல்லை.






